சேலம்,
சேலம் மாவட்டம் கெங்கவல்லி, கூடமலை பகுதிக்கு நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தபோது அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழ்நாடெங்கும் நீரை சேமிப்பதற்கு திட்டங்கள் உருவாக்குவதற்காக தனிப்பிரிவே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஓய்வு பெற்ற தலைமை பொறியாளரை நியமித்து, அவர்கள் அதற்காக திட்டத்தை வகுத்துக் கொடுத்து, அரசு செயல்படுத்த இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, இந்த ஆட்சி கலைந்துவிடும், தான் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்று கனவு கண்டிருந்தார். அந்த கனவு பகல் கனவாகிவிட்டது. டி.டி.வி.தினகரனும் தி.மு.க.வின் தூண்டுதலில் இந்த கட்சியை உடைக்க ஒரு கட்சியை ஆரம்பித்தார்.
இன்றைக்கு பாலாஜி என்கிற ஒரு செங்கல் பிடுங்கிச் சென்றுவிட்டது. அவரை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று எங்களிடம் இருந்து பிரிந்து சென்றார். இப்பொழுது ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று சென்றிருக்கிறார். கடைசியில் யாருடன் நடுத்தெருவில் நிற்கப்போகிறாரோ தெரியவில்லை. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், தி.மு.க.வுக்கு கொள்கை, கோட்பாடே கிடையாது, அதிகாரம் மட்டும்தான் அவர்களுக்கு தேவை.
பா.ஜ.க. ஆட்சியின்போது கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தார்கள். அதற்கு சறுக்கல் வந்தவுடன், காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து மத்திய மந்திரியாக இருந்தார்கள். அவர்களுக்கு தேவை அதிகாரம் ஒன்றுதான். 14 ஆண்டுகாலம் தொடர்ந்து மத்தியில் ஆட்சி செய்த ஒரு கட்சி தி.மு.க. தான், தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவர்கள் குடும்பம்தான் வளர்ந்தது, கருணாநிதி, அவருடைய பையன், இப்பொழுது பேரனும் வந்துவிட்டார் எல்லாம் வாரிசு.
அ.தி.மு.க.வில் திறமை இருப்பவர்கள், மக்களுக்கு உழைப்பவர்கள் தான் பதவிக்கு வரமுடியும். சாதாரண தொண்டன், விவசாயத் தொழிலாளிகூட வரலாம். 14 ஆண்டுகாலம் மத்தியில் தி.மு.க. ஆட்சி செய்தபொழுது, தமிழகத்திற்கு தேவையான தொழிற்சாலைகளை கொண்டு வந்திருக்கலாம். புதிய திட்டங்களை போடுவதற்கு நிதியை பெற்றுத்தந்திருக்கலாம். ஒன்றும் கொண்டு வரவில்லை. காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏதாவது பாடுபட்டார்களா? அந்த வாய்ப்பு தி.மு.க.வுக்கு இருந்தும் செய்யவில்லை.
மக்களை பற்றி கவலையில்லை, அவர்களுடைய வீட்டு மக்களை பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். யார் பெரியவன் என்று சர்வே போட்டு, 3 பேரை எரித்தே கொன்றார்கள். இவையெல்லாம் கடந்தகால வரலாறு. அ.தி.மு.க. ஆட்சியில் மக்களை பற்றி சிந்திப்பது தான் அரசின் கடமை.
உங்கள் துணையோடு, 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். நீங்கள் எத்தனை கட்சியில் கூட்டு சேர்ந்தாலும் மக்கள் நினைத்தால்தான் வெற்றிபெற முடியும். ஆனால், நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்திருக்கின்றோம், மக்கள் எண்ணுவதை நிறைவேற்றும் விதமாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
உழைப்பவர்கள் என்றைக்கும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்பதற்கு நானே சான்று. சாதாரண கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து, உழைத்து, படிப்படியாக முன்னேறி இன்றைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். உங்களைப்போல் குறுக்குவழியில் வரவில்லை. நான் என்று எம்.எல்.ஏ. ஆனேனோ, அப்பொழுதுதான் ஸ்டாலினும் எம்.எல்.ஏ. ஆனார்.
நான் உழைத்து, படிப்படியாக முன்னுக்கு வந்து, இன்று முதல்-அமைச்சராகி இருக்கிறேன். நீங்கள் அப்படியல்ல, உங்கள் அப்பா தி.மு.க. தலைவராக இருந்தார், முதல்-அமைச்சராக இருந்தார், அதனால் நீங்கள் எம்.எல்.ஏ. ஆகி வந்துவிட்டீர்கள். கிராமத்தில் பிறந்தவன் முதல்-அமைச்சராக வேண்டும் என்றால் எவ்வளவு கடினம் என்பது மக்களுக்கு தெரியும்.
கஜா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டு, விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சூழ்நிலையில், 15 நாட்கள் அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு பணி மேற்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். தி.மு.க.வினரால் முடியுமா? என்றைக்காவது தி.மு.க. அமைச்சர்கள் 5 நாள் முகாமிட்டு வேலை பார்த்திருக்கிறார்களா, கிடையாது. எதிர்க்கட்சிகள் எத்தனை கட்சிகள் சேர்ந்து குறை கூறினாலும், மக்களோடு சேர்ந்து அவைகளை எல்லாம் முறியடித்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தொடர நீங்கள் பக்கபலமாக இருப்பீர்கள்.
வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் உங்களை எல்லாம் நாடிவந்து கேட்பார்கள், அப்பொழுது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபொழுது, நாட்டு மக்களுக்கு என்ன செய்தீர்கள், என்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என்று கேளுங்கள். ஏனென்றால், அதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால்தான், மத்திய அரசிடம் போராடி அதிக நிதியை கேட்டு திட்டங்களை நிறைவேற்ற முடியும். அந்த வாய்ப்பை அ.தி.மு.க. அரசுக்கு தொடர்ந்து நல்குங்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதேபோல் சேலம் மாவட்டம் கீரிப்பட்டி மற்றும் தம்மம்பட்டி பகுதியிலும், நாமக்கல் மாவட்டம் திம்மநாயக்கன்பட்டியிலும் பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.