தமிழக செய்திகள்

திமுக பீனிக்ஸ் பறவை; மீண்டும் ஆட்சிக்கு வருவோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு

இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி மட்டுமே தவெக ஆட்சிக்கு வந்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தஞ்சை,

தஞ்சையில் பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தேர்தல் தோல்விகளை கண்டு திமுக சிதறாது. யாரும் சோகமாக இருக்கத் தேவையில்லை. வெற்றி, தோல்வி என்பதைச் சமமாகக் கருதிப் பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய தொண்டன்தான் திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது.

திமுக கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போதைய அரசு செயல்படுத்தி வருகிறது. திமுகவின் சாதனைகளை யாராலும் மாற்ற முடியாது. திமுகவின் திட்டங்கள் இருக்கும் வரை நாம்தான் ஆட்சி செய்கிறோம். இந்தத் திட்டங்களை யாராலும் மாற்றிவிடவோ, தடுத்துவிடவோ முடியாது.

திமுக நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்கி உள்ளது. தேர்தல் தோல்வி குறித்து அனைவரிடமும் கருத்துக்கேட்டு வருகிறோம்.

நாம் எல்லா பணியும் செய்து தோல்வியடைந்தோம்; அவர்கள் எந்த பணியையும் செய்யாமல் வெற்றி பெற்றனர்சமூக வலைதளங்கள் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. சிறு குழந்தைகளை பரப்புரை செய்ய வைத்து அவர்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். பெற்றோர்கள், குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

திமுகவின் கதை முடிந்துவிட்டது என நமது இன எதிரிகள் நினைக்கிறார்கள். ஆனால், நமது கழகம் தோல்வி அடைந்தபோதெல்லாம் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல எழுந்து வந்துள்ளது என்பதுதான் நமது வரலாறு.மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.