சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காவேரி ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், 8 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் டாக்டர்களின் 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சையின் காரணமாக கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காவேரி ஆஸ்பத்திரியின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று இரவு 8 மணி அளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிறப்பான மருத்துவ சிகிச்சை மூலம் அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது. தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அவரை டாக்டர் கள் குழு கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தனர்.
இந்த நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்துள்ளார். அவர் இன்று நண்பகல் 12.30 மணியளவில் மருத்துவமனைக்கு செல்கிறார்.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க பா.ஜ.க.வின் தேசிய பொது செயலாளர் முரளிதரராவ் மற்றும் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு இன்று வந்தனர்.
அவர்கள் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தனர்.
அதன்பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த முரளிதரராவ் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தமிழகத்துக்கு மட்டுமின்றி நாட்டுக்காக பாடுபட்டவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
கருணாநிதி பூரண குணமடைய வேண்டும் என எங்களது கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உள்பட பாரதீய ஜனதா கட்சியினர் அனைவரும் விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.