சென்னை,
சென்னையில், சி.பி.ஐ. இணை இயக்குனரை, தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் நேற்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுசன்ஸ் எனும் அமெரிக்க நிறுவனத்தின், கிளை நிறுவனங்கள் காக்னுசன்ட் இந்தியா என்ற பெயரில் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான குழந்தைகள் வளாகத்தில் 27 லட்சம் சதுர அடியில் வளாகத்தை கட்டுவதற்கும், காஞ்சீபுரத்தில் உள்ள சிறுசேரியில் வளாகம் கட்டுவதற்கும் அனுமதி பெறுவதற்காக தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் (ரூ.20 லட்சம்) லஞ்சம் அளித்தது தொடர்பாக, அமெரிக் காவின் பங்குச்சந்தை ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
இந்த விவகாரத்தில் லஞ்சம் கொடுக்கப்பட்டு உள்ளது என்று அந்த ஆணையம் அறிக்கை அளித்தது. இதுதொடர்பாக அமெரிக்க நீதித்துறையும், அமெரிக்க அரசு வக்கீல் அலுவலகமும் தொடர்ந்த வழக்கில் பங்குச்சந்தை ஆணையத்தில் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டு காக்னிசன்ட் நிறுவன அதிகாரிகளும் தங்கள் வாதத்தை பதிவு செய்தனர்.
சி.பி.ஐ. விசாரணை
இந்த லஞ்ச பணத்தை தமிழக அரசு அதிகாரிகள் நேரடியாக பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டாலும் வீட்டுவசதி, மின்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களுக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. அந்த பணத்தை அதிகாரிகளோடு, அமைச்சர்களும் பங்கு போட்டுக்கொண்டு உள்ளனர்.
எனவே, இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும். குற்றச்சாட்டை பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வெகு விரைவில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இறுதி அறிக்கையை தாக்கல் செய்து சட்ட விதியை நிலைநாட்டிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.