தமிழக செய்திகள்

சென்னை பாரிமுனையில் தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கடும் கண்டனம்

சென்னை பாரிமுனைப்பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தவெகவினர் மீது திமுக ரவுடிகள் தாக்கியதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

பாரிமுனை பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தவெகவினரை ஆளும் தரப்பினர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் தீவிரச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலில் திமுக ஈடுபட்டுள்ளதாகவும் இது திமுகவின் தோல்வி பயத்தையே காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்” என்று பதிவிட்டுள்ளார்.

என்ன நடந்தது?

தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை த.வெ.க. நிர்வாகிகள் சர்வே எடுத்து வருகிறார்கள். அதன்படி சென்னை துறைமுகம் தொகுதியில் மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது? த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதரவு எப்படி இருக்கிறது? என்பது உள்பட கேள்விகளுடன் த.வெ.க.வை சேர்ந்த 5 பேர் பாரிமுனை அங்கப்பன் தெருவில் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதுபற்றி தகவலறிந்து அப்பகுதியை சேர்ந்த தி.மு.க.வினர் திரண்டனர். ‘சர்வே’ எடுக்க முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தி.மு.க.வினருக்கும், த.வெ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. இதில் த.வெ.க. நிர்வாகிகளான மண்ணடியைச் சேர்ந்த தங்கபாண்டியன் (30), அவரது சகோதரி பவானி (26), மண்ணடி ஆதாம் தெருவைச் சேர்ந்த ஜாபர் உசேன் (36), பாரிமுனை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த திலிப் (30), கொண்டித்தோப்பைச் சேர்ந்த முகேஷ் (41) ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் 5 பேரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து த.வெ.க. சார்பில் வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. ‘சர்வே’யில் ஈடுபட்ட த.வெ.க.வினரை தி.மு.க.வினர் தாக்கிய ‘வீடியோ’ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.