சென்னை,
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 30 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் வாக்குச்சீட்டு முறைப்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. பின்னர் வாக்குகள் அனைத்தும் ஐந்து நாட்களுக்குப் பிறகு எண்ணப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய வாக்குப்பதிவின் போது பல்வேறு இடங்களில் குழப்பம் ஏற்பட்டது. தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு கேட்டு திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;-
வாக்குச்சீட்டுகள் எண்ணப்படும் வரை வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையை அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும்.
திமுகவின் கோரிக்கையின் படி தேர்தல் ஆணையம், காவல்துறை உள்ளிட்டோருக்கு உரிய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
திமுக தரப்பில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு வரும் 30 ஆம் தேதி (திங்கட்கிழமை) விசாரிக்கப்படுகிறது.