தமிழக செய்திகள்

தி.மு.க. இளைஞரணியில் உறுப்பினராகும் வயது வரம்பு 35 ஆக உயர்வு: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

தி.மு.க. இளைஞரணியில் உறுப்பினராகும் வயது வரம்பு 35 ஆக உயர்ப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இளைஞரணி துணை செயலாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.ஜோயல், ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, பைந்தமிழ் பாரி, ஆ.துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர் ராஜா வரவேற்றார்.

இந்த கூட்டத்தில், 15 முதல் 30 வயது உள்ளவர்கள் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும் உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை உடனுக்குடன் வழங்கப்பட உள்ளது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வரலாறு காணாத வகையில் வெற்றி பெற வைத்த தி.முக. தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியினர், கூட்டணி கட்சி தலைவர்கள், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்.

அடுத்த மாதம் (செப்டம்பர்) 14-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதிக்குள்ளான 2 மாதங்களுக்குள் ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 10 ஆயிரம் பேருக்கு குறையாமல் ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக நம்முடைய நிர்வாகிகள் சேர்க்கவேண்டும். தமிழகத்தில் அரசு வேலை வாய்ப்பில் தமிழருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.

ஏழை-எளிய-நடுத்தர மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை வரையரையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

தவறான பொருளாதார கொள்கைகளினால் தமிழகத்தில் தொழில்துறை நிறுவனங்கள் லாபகரமாக தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் வேலை இழக்கும் சூழல் நிலவுகிறது. இந்தநிலையை ஏற்படுத்திய மத்திய-மாநில அரசுகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

இதுதவிர பல்வேறு தீர்மானங்களும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ம.தி.மு.க.வுடன் விரிசலா?

பின்னர் கூட்டம் முடிந்த பின்பு உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:-

இந்த கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கையை எப்படி துரிதப்படுத்தலாம் என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இளைஞர்களை சேர்ப்பதற்காக விரைவில் செல்போன் ஆப்(செயலி) தொடங்க உள்ளோம். இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் மோசமாக உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்படும்.

இதற்கான பணி திருக்குவளையில் இருந்து தொடங்கப்படும். தி.மு.க.வுக்கும், ம.தி.மு.க.வுக்கும் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. கூட்டணியும், தோழமையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை