சென்னை,
முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத், மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசியதாவது:- கஜா புயல் மிகப்பெரிய சேதத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் இதுவரை இதுபோன்ற புயல் வந்ததில்லை. ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேத மதிப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. புயலால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஆனால் இதுவரையில் முதல்-அமைச்சரும் சரி, பிரதமராக இருக்கும் மோடியும் சரி இங்கு வந்து பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறியது கிடையாது.
தமிழ்நாடு இந்தியாவிற்குள் தானே இருக்கிறது. 40-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் நிவாரண உதவி அறிவித்து இருக்கிறார். வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இந்த நிவாரணம் போதுமா?. மத்திய அரசும், மாநில அரசும் தமிழர்களை வஞ்சித்து வருகிறது. பசி, பட்டினியால் டெல்டா பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
அ.தி.மு.க. அரசையும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசையும் அகற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை மதசார்பற்ற சக்திகள் இணைந்து கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
திருமாவளவன் பேசும்போது, மதவாதம் இந்திராகாந்தியை பலி கொண்டது. இன்றைக்கும் மதவாதம் தலைதூக்கி நிற்கிறது. இதனை ஒடுக்க வேண்டும். இந்த தேசத்தை காக்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரள வேண்டும். பா.ஜ.க.வை வீழ்த்தும் சக்தி காங்கிரசிடம் இருக்கிறது. இதை டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தபோது கூறினேன். ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமராக வர வேண்டும். மீண்டும் மதவாத சக்திகள் வந்து விடக்கூடாது. இதற்கான அனைவரும் ஒன்றுமையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஒ.பி.சி. பிரிவு தலைவர் நவீன், துணைத்தலைவர் ரவிராஜ், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.அகமது அலி, செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், மயிலை தரணி, மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.