தமிழக செய்திகள்

விளாத்திகுளம் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை சம்பவத்தில் 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி, கடந்த 10-ந்தேதி இரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. மறுநாள் காலையில் அந்த மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுபற்றி அறிந்த குளத்தூர் போலீசார், மாணவியின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். நேற்றும் 5-வது நாளாக மாணவியின் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே மாணவி கொலை வழக்கை தீவிரமாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் சம்பவம் நடந்த இடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் மாணவியின் உடன்படித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட சந்தேகப்படும் வகையிலான 20-க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

Also read:தூத்துக்குடி: 12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலை வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி முறையீடு

அவர்களிடமிருந்து பல்வேறு கோணங்களில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த நிலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி தலைமையில் 2 துணை சூப்பிரண்டுகள் அடங்கிய 10 தனிப்படை போலீஸ் குழுவினர் மாணவி கொலை செய்யப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அளிக்கும் ஒவ்வொரு தகவல்களையும் போலீசார் ஆராய்ந்து அதன் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, சிறுமி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.“சிறுமிக்கு நன்கு தெரிந்த நபரே குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சடலம் மீட்கப்பட்டது. மாணவி கொலையில் சந்தேக நபர்கள் 5 பேரிடம் டிஎன்ஏ சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிமன்றம் கூறியதாவது: அறிவியல் முறையில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். முறையாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தால் இவ்வளவு தூரம் போயிருக்காது. காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்படக்கூடாது. மாணவியை காணவில்லை என்பது முக்கியமான புகார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.