சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் சீரான மின் வினியோகம் வழங்க, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்டலம் வாரியாக மின்துறையின் மின்வினியோக அலுவலர்கள், பொறியாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சீரான மின் வினியோகம் வழங்கவும், வினியோகத்தின் போது ஏற்படும் சிறுசிறு பழுதுகளை உடனுக்குடன் சரி செய்து மின்வினியோகம் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னை மாநகருக்கு மின் வினியோகம் செய்வதில் முக்கிய பங்குவகிக்கும் துணை மின் நிலையங்கள், மின் கட்டண மையங்கள், மின்அலுவலகங்கள் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்த தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் விக்ரம் கபூர், மின்நுகர்வோர் புகார் மையங்களையும் அங்கு பெறப்பட்ட புகார்கள் மற்றும் அப்புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
தரமணி, வேளச்சேரி, ஒட்டியம்பாக்கம் துணை மின்நிலையம் மற்றும் ஒட்டியம்பாக்கம்- தரமணி மின் வழிப்பாதை மற்றும் நிறுவப்படவிருக்கும் ஒட்டியம்பாக்கம்- கிண்டி மின் வழிப்பாதை ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் விக்ரம் கபூர், மின் தொடரமைப்புக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ். சண்முகம், மின்பகிர்மானம் இயக்குனர்கள் எம்.ஏ.ஹாலன், ஏ.ஆக்ஸ்லியம் ஜெயம்மேரி மற்றும் தலைமைப் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், மின்தடை ஏற்படாமல் சீரான மின் வினியோகம் வழங்க அனைத்து அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றுவதுடன், பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களுக்கு, விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.