சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வே துறையில் கோட்ட ரெயில் கட்டுப்பாட்டு அதிகாரிக்கும், நிலைய அதிகாரிகளுக்கும் இடையிலான அலுவல் சார்ந்த உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டும் தான் இருக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் தமிழில் உரையாடக் கூடாது என்று ஆணையிடப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தைக்காட்டி இந்தியைத் திணிப்பதற்கான இந்த முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
மாநில மொழிகளை புறக்கணித்துவிட்டு ஆங்கிலமும், இந்தியும் தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அது தெற்கு ரெயில்வே துறையில் தமிழர்களை வெளியேற்றிவிட்டு, முழுக்க முழுக்க இந்தி பேசும் வடஇந்தியர்களை நியமிப்பதற்கே வழிவகுக்கும். இது ஆபத்தானது. எனவே, தெற்கு ரெயில்வேயில் பணியாற்றும் வடஇந்தியர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவிட்டு, அவர்களுக்கு மாற்றாக தமிழர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது:-
தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கை, இந்தியை அப்பட்டமாகத் திணிப்பதற்கு வழி செய்து வெந்த புண்ணில் வேல் வீசி இருக்கிறது. உடனடியாக இந்தி சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். தமிழ்நாட்டில் 1937-ம் ஆண்டு தொடங்கிய இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் 82 ஆண்டுகளாக இன்னும் நீறுபூத்த நெருப்புபோல் கனன்று கொண்டே இருக்கிறது என்பதை பா.ஜ.க. அரசு மறந்துவிட வேண்டாம். தமிழகம் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்புக்கு எதிராக சிலிர்த்து எழும். நெருப்போடு விளையாட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியிருப்பதாவது:-
பணிபுரியும் மாநிலத்தின் மொழியறியாதவர்களைக் கொண்டு அதிகாரவர்க்க சக்திகள் ஒன்றிணைக்கப்படுவதும், அந்த மொழி தெரிந்தவர்களும் பேசக்கூடாது என உத்தரவிடப்படுவதும், ஒரு அன்னியநாட்டு படையெடுப்பை போன்ற தோற்றத்தைத் தருகிறது. இந்திய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் நேர்விரோதமான பாதையில் மத்திய அரசு செல்வதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது. தமிழகத்திலுள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வே அதிகாரிகள் இனி தமிழில் பேசக்கூடாது. இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் உரையாட வேண்டும் என்பது யதேச்சதிகாரப்போக்கு அல்லவா? 8-ம் அட்டவணையில் 22 மொழிகளில் ஒன்று தமிழ் என்பதைவிட உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்களால் எழுதப்பட்டும், பேசப்பட்டும், மேலும் சில நாடுகளில் ஆட்சி மொழியாகவும் உள்ள செம்மொழி தமிழுக்கு தமிழ்நாட்டில் தடையா? தமிழக அரசும் அனைத்துக் கட்சிகளும் உடனடியாக இதற்கு கண்டனம் தெரிவித்து, இதை திரும்பப்பெற வைக்க வேண்டும். இன்றேல் மக்களின் அறப்போராட்ட கிளர்ச்சி வெடிப்பது உறுதி.
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., தென்னக ரெயில்வே வெளியிட்டு இருக்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும். இதுபோன்ற மொழியுரிமையை பறிக்கும் செயலில் மத்திய அரசு இனி ஈடுபட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்தியை திணித்து தமிழை தடை செய்த இந்த பாசிச சர்வாதிகாரத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.