சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக, அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி சட்டமன்ற தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என எதிரணியில் உள்ள எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதுமட்டுமல்லாமல், பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து கையெழுத்து பெறக்கூடிய வேலையில் மாவட்ட வாரியாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுக்குழுவை கூட்ட கோரினால் கையெழுத்து போட வேண்டாம் என தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டார். மேலும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை பயன்படுத்தி கையெழுத்து கேட்டால் யாரும் போட வேண்டாம் என ஏற்கனவே கட்சியின் துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதை மீண்டும் வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி, தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் எந்தவிதமான கையெழுத்தும் போட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.