சென்னை,
சென்னையை அதிர வைத்துள்ள மயிலாப்பூரில் வசித்த தொழில் அதிபர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மயிலாப்பூர் துவாரகா காலனியில் உள்ள வீட்டில் வைத்து அவர்கள் இருவரும் மண்வெட்டி கட்டையால் தலையில் தாக்கப்பட்டும், கழுத்தில் கத்தியால் குத்தியும் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.
அவர்களது வீட்டில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 1000 பவுன் தங்க, வைர நகைகள் மற்றும் 70 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட தொழில் அதிபரிடம் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய நேபாளத்தை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவிராயும் இந்த படுபாதக செயலை செய்ததாக கைது செய்யப்பட்டனர்.
கொள்ளையடித்த நகைகளுடன் காரில் நேபாளத்துக்கு தப்பிச்சென்ற கொலையாளிகளை ஆந்திர மாநிலம், ஓங்கோலில் வைத்து போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். நகைகள் பத்திரமாக மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் அவர்களது காரில் கொண்டு செல்லப்பட்டு, சென்னையை அடுத்த நெமிலிச்சேரியில் உள்ள அவர்களது பண்ணை வீட்டிலேயே கொலையாளிகளால் புதைக்கப்பட்டிருந்தது.
உடல்கள் தகனம்
பண்ணை வீட்டில் ஒரே குழியில் புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைத்து உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல்கள் ஷெனாய் நகரில் உள்ள தனியார் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே தொழில்அதிபர் ஸ்ரீகாந்தின் மகன் சஸ்வத், மகள் சுனந்தா ஆகியோர் அமெரிக்காவில் இருந்து விமானத்தில் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்கள். மகள் சுனந்தா 4 மாத கைக்குழந்தையுடன் வந்துள்ளார். நேற்று தனது தந்தை, தாய் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இதனையடுத்து நேற்று பிற்பகல் 2 மணி அளவில் ஸ்ரீகாந்த்தின் உடலும், அவரது மனைவியின் உடலும் மயிலாப்பூர் கைலாசபுரம் சுடுகாட்டில் வைத்து தகனம் செய்யப்பட்டது. உடல்கள் வீட்டுக்கு எடுத்து செல்லப்படவில்லை. வீட்டில் இருவரது புகைப்படங்களும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
மகன்-மகளிடம் விசாரணை
இந்த வழக்கில் ஸ்ரீகாந்தின் மகன்-மகளிடம் இறுதிகட்ட விசாரணை நடத்தப்பட உள்ளது. இன்று (புதன்கிழமை) அந்த விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
விசாரணையின்போது, கொலையாளிகளிடம் மீட்கப்பட்ட நகைகள் அடையாளத்திற்காக காட்டப்படும் என்று தெரிகிறது.
கைது செய்யப்பட்டுள்ள கொலையாளிகள் கிருஷ்ணா, ரவிராய் இருவரும் தற்போது நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.