காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இரட்டை திருமாளிகை சீரமைப்பு நிதியில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட புகாரில் கோர்ட்டு உத்தரவின்படி 6 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த வழக்கு, திருச்சி சிலை தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில், பல்லவ மன்னன் கலைநுட்பத்துடன் இரட்டை திருமாளிகையை உருவாக்கினார். சேதம் அடைந்த அந்த திருமாளிகை சீரமைப்பு பணியில் முறைகேடு நடந்து உள்ளதாக கூறப்படுகிறது.
காஞ்சீபுரம் ராயன்குட்டையை சேர்ந்த சிவபக்தர் டில்லிபாபு என்பவர், இது குறித்து ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகத்திடம் கேட்டார். ஆனால் அவர்கள், சரியான பதில் அளிக்கவில்லை.
இதனால் அவர், பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இதனால் டில்லிபாபு, காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டு எண்-1-ல், இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மீனாட்சி, தமிழக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, வேலூர் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் இணை ஆணையர் சிவாஜி, காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியம், நந்தகுமார் ஸ்தபதி ஆகிய 6 பேர் மீது கூறப்பட்ட புகார் தொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, பெரிய காஞ்சீபுரம் போலீசுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டு உத்தரவின்பேரில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பஞ்சாட்சரம் மேற்பார்வையில், பெரிய காஞ்சீபுரம் இன்ஸ்பெக்டர் பழனி 120 பி, 379, 380(2), 420, 409, 437, 468, ஆகிய 7 பிரிவுகளின் கீழ் மேற்கண்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார்.
மேலும், இந்த வழக்கை திருச்சியில் உள்ள சிலை தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இன்ஸ்பெக்டர் பழனி தெரிவித்தார்.