சென்னை,
மதுரை-விருதுநகர் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரட்டை ரெயில் பாதை பணியின்போது, ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தென்மாவட்ட ரெயில்கள் அனைத்து பல மணி நேரம், விடிய விடிய நடுவழியிலே நிறுத்தி வைக்கப்பட்டு, பின் தாமதமாக இயக்கப்பட்டது.
இதனால் சென்னை வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பலர் உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதியுற்றனர். இன்னும் சிலர் ரெயில் பயணமே வேண்டாம் என தண்டவாளத்தில் இறங்கி, பொடி நடையாக பஸ் நிலையம் வந்து சென்னைக்கு பஸ்சில் புறப்பட்டனர்.
இந்த திடீர் பாதிப்பால், ரெயில்வே நிர்வாகம் இதுபோன்ற பணி நடைபெறும் போது முன்னதாகவே தகவல் தெரியப்படுத்துங்கள் என பயணிகள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினமும் தென்மாவட்ட ரெயில்கள் காலதாமதமாகவே புறப்பட்டது.
6 மணி நேரம் தாமதம்
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு வந்து சேரும் வழக்கமான நேரத்தை விட 6 மணி நேரம் தாமதமாகவும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாகவும், பொதிகை எக்ஸ்பிரஸ் 4 மணி நேரமும், செந்தூர் எக்ஸ்பிரஸ் 4 மணி நேரமும், முத்து நகர் எக்ஸ்பிரஸ் 6 மணி நேரமும், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 3 மணி நேரமும் தாமதமாக எழும்பூர் வந்து சேர்ந்தது.
இந்த தாமதத்தால், நேற்று தென்மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பயணிகள், தெற்கு ரெயில்வே ஒரு நாளைக்கு முன்பாவது இது தொடர்பாக அறிவிப்பு முறையாக வெளியிட்டிருக்க வேண்டும் எனவும், ரெயில்வே நிர்வாகத்தின் இது போன்ற மோசமாக செயல்கள் வருத்தமளிக்கிறது எனவும் ஆதங்கத்தை தெரிவித்து சென்றனர்.