சென்னை,
பா.ம.க இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கலால்வரி உயர்வு
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்து வரும் நிலையில், அதன் பயனாக பெட்ரோல், டீசல் விலைகளை கணிசமாக குறைக்கப்படும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக ரூ.3 கலால் வரி வசூலிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. கச்சா எண்ணெய் விலை குறைவின் பயன்கள் சாதாரண மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அனைத்தையும் அரசே அனுபவிக்கக்கூடாது.
குறைக்க வேண்டும்
கலால் வரி லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.39 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி வருமானம் கிடைத்து வரும் நிலையில், இந்த வருமானத்தை ஆண்டுக்கு ரூ.4.50 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அடுத்தடுத்து கலால் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
பொருளாதார பின்னடைவால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன்களை அரசே முழுமையாக பறித்துக் கொள்ளக்கூடாது. மக்களுக்கும் விலைக்குறைப்பு மூலம் ஓரளவு சலுகை வழங்க வேண்டும். எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும். இனி வருங்காலங்களிலும் கலால் வரியை உயர்த்தக்கூடாது. மாறாக, பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.