சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் அமைக்க முடியாது என்பதை மத்திய அரசு வேறு வேறு வார்த்தைகளில் கூறிவிட்ட பிறகும், முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் எந்த அடிப்படையில் மத்திய அரசை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
அதுமட்டுமின்றி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை, அதில் செயல்திட்டம் என்று தான் கூறப்பட்டுள்ளது. அதையும் கூட உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் அமைக்க முடியாது என்றும் மத்திய அரசு உறுதிபட கூறிவிட்டது. இதனால் இப்போது மட்டுமின்றி எப்போதுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வாய்ப்பில்லை, ஒருவேளை காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ஏதேனும் ஒழுங்குமுறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டாலும் கூட அது எந்த அதிகாரமும் இல்லாத சொத்தை அமைப்பாகத் தான் இருக்கும். இது மட்டும் நடந்து விட்டால், காவிரிப் பிரச்சினைக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் பயனில்லாமல் போய்விடும்.
எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகங்களை தமிழக ஆட்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியை ஏற்படுத்துதல், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்டது போன்ற மிகப் பெரிய போராட்டத்தை விவசாயிகளையும், மக்களையும் முன்னிறுத்தி நடத்துதல் ஆகியவை தான் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படுவதற்கும் வகை செய்யும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.