தமிழக செய்திகள்

தினமும் ரூ.10 கோடி இழப்பு: பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பஸ் கட்டண உயர்வால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #TNnews #tamilNadu

சென்னை,

பஸ் கட்டண உயர்வால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு அறிவித்த பஸ் கட்டண உயர்வு பயன்களை விட, பாதிப்புகளை அதிகமாக்கி இருக்கிறது. பஸ் கட்டண உயர்வு காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் தினமும் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்படும் 22 ஆயிரத்திற்கு மேற்பட்ட பஸ்களில் தினமும் சராசரியாக 2.10 கோடி பேர் பயணம் செய்து வந்தனர். கட்டண உயர்வின் காரணமாக 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு பஸ்களில் பயணம் செய்வதை கைவிட்டு, தனியார் பஸ்கள், ரெயில்கள், ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்யத் தொடங்கியது தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் கட்டண உயர்வுக்குப் பிறகு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.38 கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க் கப்பட்ட நிலையில், ரூ.28 கோடி வரை மட்டும் தான் வசூலாவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் குறைந்ததற்கான காரணங்களை கண்டறிய, மதுக் கடைகளுக்கு நடத்தியது போன்ற ஸ்வோட் எனப்படும் உத்தி திட்டமிடல் பகுப்பாய்வு நடத்தத் தேவையில்லை. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பதைப் போன்று, அரசுப் பஸ்களின் வருவாய் குறைய கட்டண உயர்வு தான் காரணம் என்பது தெளிவாகத் தெரியும் போது அதுபற்றி எந்த ஆய்வும் தேவையில்லை.

கட்டண உயர்வு 10 சதவீதத்துக்குள் இருந்தால் அதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், 100 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டால் பணக்காரர்களால் கூட ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாது. அது தான் இப்போது நடைபெற்றிருக்கிறது.

சென்னை புறநகர் ரெயில்களில் கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து கிண்டி வரை 5 ரூபாயும், தாம்பரம் வரை 10 ரூபாயும், செங்கல்பட்டு வரை அதிகபட்சமாக 20 ரூபாயும் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சாதாரணப் பஸ்களில் பயணம் செய்ய இதை விட 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு ரூ.25, ரூ.30 மட்டுமே ரெயில் கட்டணம். சீசன் டிக்கெட் எடுத்தால் ஒரு நாளைக்கு திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு ரூ.5.50 மட்டும் தான் கட்டணம். ஆனால், சாதாரணப் பஸ்களில் திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு ரூ.110 கட்டணம். இந்த அளவுக்கு கட்டண விகிதம் அதிகமாக இருந்தால் பயணிகள் பஸ்சில் பயணிக்க எவ்வாறு முன்வருவார்கள்? புறநகர் ரெயில்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டால் மாநகரப் பஸ்களின் வருமானம் மேலும் பல மடங்கு குறைந்து விடக்கூடும்.

வழக்கமாக அரசுப் பஸ்களை விட தனியார் பஸ்களில் தான் கட்டணம் அதிகமாக இருக்கும். இப்போது அரசுப் பஸ்களை விட தனியார் பஸ்களில் கட்டணம் குறைவாக உள்ளது. புறநகர் பகுதிகளில் கூட அரசுப் பஸ்களில் ரூ.30 ஆக இருந்த கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பஸ்களில் ரூ.35 முதல் ரூ.40 வரை மட்டும் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசுப் பஸ்களின் வருமானம் கணிசமாக குறைந்ததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும்.

எனவே, உயர்த்தப்பட்ட பஸ் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மேலும், அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களை சீரமைத்தும், காலாவதியான பஸ்களுக்கு மாற்றாக புதிய பஸ்களை வாங்கியும் இயக்க தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.