சென்னை,
கல்லணைக்கு கீழே ஓடும் காவிரியிலும், அதன் சிறிய கிளை ஆறுகளிலும் கட்ட உள்ள 62 தடுப்பணைகளை உடனடியாக கட்டுவதுடன், கொள்ளிடம் ஆற்றிலும், முக்கொம்புக்கு முன்னால் உள்ள அகண்ட காவிரியிலும் பெரிய அளவிலான அணைகளை கட்ட திட்டங்கள் வகுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளின் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் அவற்றின் குறுக்கே 62 தடுப்பணைகள் ரூ.292 கோடி செலவில் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். இது 2013-ம் ஆண்டுக்கு முன்பே இறுதி செய்யப்பட்ட திட்டமாகும்.
இந்த தடுப்பணைத் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்திலேயே செயல்படுத்தப்பட்டிருந்தால் காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றிருக்கும். 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.117 கோடி செலவில் நிறைவேற்றியிருக்க வேண்டிய இந்தத் திட்டத்தின் மதிப்பு தற்போது இரு மடங்கு அதிகரித்து ரூ.292 கோடி ஆகியிருக்கிறது.
மேலும், இத்திட்டம் கல்லணைக்கு கீழே ஓடும் காவிரி ஆற்றிலும் அதன் சிறிய கிளை ஆறுகளிலும் மட்டுமே செயல்படுத்த முடியும். இந்த தடுப்பணைகள் ஒவ்வொன்றிலும் அதிகபட்சமாக டி.எம்.சி தண்ணீரை மட்டுமே சேமித்து வைக்க முடியும். இது போதுமானதல்ல. கொள்ளிடம் ஆற்றிலும், முக்கொம்புக்கு முன்னால் உள்ள அகண்ட காவிரியிலும் குறைந்தது 5 டி.எம்.சி கொள்ளளவுள்ள தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். இதற்குத் தனியாகத் திட்டம் வகுத்து செயல்படுத்தினால் தான் காவிரி பாசன மாவட்டங்களை வளமானதாக மாற்ற முடியும்.
எனவே, இனியும் தாமதிக்காமல் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் 62 தடுப்பணைகளை கட்டும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதுடன், பெரிய அளவிலான தடுப்பணைகளைக் கட்டுவதற்கான திட்டத்தையும் விரைவாக வகுத்து செயல்படுத்த வேண்டும். மேலும் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகள், பாசனக் கால்வாய்கள், அவற்றுடன் இணைக்கப்பட்ட ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளையும் தூர்வாரி பராமரிப்பதற்கான திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.