சென்னை,
பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆலோசனைப்படி தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்த ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி முகாம் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.
முகாமில், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகன், முன்னாள் மாநில தலைவர்கள் இல.கணேசன் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயிற்சி முகாம் முடிவில், டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லை
தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருகை தந்தது முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான எங்கள் பணி தொடங்கிவிட்டது. வாக்குச்சாவடி அளவில் முகவர்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. அமித்ஷா தமிழகத்தில் ஊழல் நிறைந்து இருக்கிறது என்று கூறினாரே தவிர ஒரு கட்சியையோ, தனிநபரையோ குறிப்பிடவில்லை. சமீபத்தில் நடந்த வருமானவரி சோதனை அதனை உறுதிப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நடந்துவரும் வருமானவரி சோதனைக்கும், பா.ஜனதாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வருமானவரித் துறையினருக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலி நிறுவனங்கள்
பணமதிப்பு இழப்பு காரணமாகத்தான் போலி நிறுவனங்கள், ஊழல்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்தியா பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு வந்துள்ளது என உலக வங்கி கூறுகிறது. பிரான்ஸ் உள்ளிட்ட 4 நாடுகளை பின்னுக்கு தள்ளி உள்ளது.
ஜி.எஸ்.டி.யின் வருமானம் வர ஆரம்பித்து இருப்பதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியிருக்கிறார். இனிமேல் பொருளாதாரத்துக்கு எவ்வித நெருக்கடியும் வராது. அது நாட்டு மக்களுக்கு திட்டங்களாக வருகிறது.
தூக்கு தண்டனை
அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமி ஒருவர் வீட்டு காவலாளிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற செய்தி உண்மையிலேயே இடிபோல் நம்மீது விழுவதாக உள்ளது. இதில் யாரையும் தப்பிக்க விடக்கூடாது. இப்படிப்பட்ட குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை தான் சரியான தீர்ப்பு. இதில் எவ்வித பாரபட்சமும், மனிதாபிமானமும் காட்டக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.