போடிப்பட்டி
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் காய்ந்த புற்களால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தீவனத்தட்டுப்பாடு
மழைக்காலங்களில் சாலைகளின் இருபுறமும் புற்கள் மற்றும் புதர்ச்செடிகள் அதிக அளவில் முளைத்துக் காணப்படும்.இதனால் கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும்.அதேநேரத்தில் இவ்வாறு வளர்ந்த புற்கள் மற்றும் புதர்ச் செடிகள் தற்போது கோடை வெப்பத்தின் தாக்கத்தால் காய்ந்து கருகியுள்ளன.மேலும் சாலைகளில் செல்லும் வாகனங்களிலிருந்து எழும் தீப்பொறி, புகை பிடிப்பவர்களால் அணைக்காமல் எறியப்படும் சிகரெட் துண்டுகள், குப்பைகளில் வைக்கப்படும் தீ போன்றவற்றால் சாலை ஓரங்களில் உள்ள காய்ந்த புற்களில் தீ பிடித்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே சாலை ஓரங்களில் உள்ள காய்ந்த புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழிப்புணர்வு
உடுமலை திருப்பூர் சாலையில் உள்ள கழிவு நீர் ஓடைக்கு அருகில் அதிக அளவில் மண் குவியல் உளது.இந்த மண் குவியலுக்கு மேல் உள்ள காய்ந்த புற்கள் மற்றும் இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து கொளுத்தப்படுகிறது.இந்த பகுதிக்கு மிக அருகில் உயர் அழுத்த மின் கம்பி உள்ளது.இவ்வாறு தீ வைப்பதால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், காய்ந்த புற்கள் மற்றும் மண் குவியலை முழுமையாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெயில் காலங்களில் ஏற்படும் தீ விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.