சென்னை,
தென்னிந்திய சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த தாசரதி, முரளிகுமார், சிஜி, மயிலை குமார், ஜேம்ஸ், கண்ணன், மதி, சுதா ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-
சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் தலைவர் பொறுப்பில் இருக்கும் ராதாரவி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார். சங்கத்துக்கு ரூ.47.5 லட்சத்துக்கு வாங்கிய நிலத்தை கோடிக்கணக்கில் வாங்கியதாக போலி கணக்கு காட்டி உள்ளார். டப்பிங் கலைஞர்கள் தங்களுக்குரிய சம்பளத்தையும் நேரில் வாங்க தடை விதித்து இருந்தார். ராதாரவியின் தவறை சுட்டிக்காட்டிய உறுப்பினர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.
டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் நடக்கும் ஊழலை விசாரிக்க மூத்த உறுப்பினர்கள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுகுறித்து விசாரிக்கும்படி தொழிலாளர் துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. தொழிலாளர் துறையும் விசாரணை செய்து ராதாரவி தலைமையிலான நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதற்கான முகாந்திரம் இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளது. எனவே ராதாரவி மீது கோர்ட்டில் மோசடி வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.