சென்னை,
அரசு பஸ் கட்டணம் வார நாட்களில் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக ஆம்னி பஸ் கட்டணங்களும் வார நாட்களில் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பணிபுரியும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். இதனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்களில் கூட்டம் அதிகரிப்பதை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் வழக்கத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து அரசு பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. ஆனால் ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் பஸ் கட்டணத்தில் அதிக அளவில் வேறுபாடு இல்லாததால் ஆம்னி பஸ்களில் பெரும்பாலானோர் பயணம் செய்ய ஆரம்பித்தனர். இதன் காரணமாக அரசு பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
பெட்ரோல், டீசல் விலை குறையத் தொடங்கியதால் தமிழக அரசு ஏ.சி. படுக்கை வசதி, சாதாரண படுக்கை வசதி பஸ்களில் கடந்த 6ந் தேதி முதல் வார நாட்களில் கட்டணத்தை குறைத்தது. எனினும், வார கடைசி நாட்களில் பழைய கட்டணத்திலேயே இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஆம்னி பஸ்களில் வழக்கமாக வார நாட்கள், வார கடைசி நாட்கள், விழாக்கால நாட்கள் என 3 வகையான கட்டணம் வசூலிக்கப்படும். அரசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து, ஆம்னி பஸ்களிலும் வார நாட்களில் வழக்கத்தைவிட குறைவான கட்டணம் வசூலிக்கப்பட்டது.
பொதுவாக பயணிகள் கூட்டத்தை பொறுத்து ஆம்னி பஸ் கட்டணத்தின் விலை மாறுபடும். அதேபோல பஸ் புறப்படும் நேரத்தில் காலியாக உள்ள இருக்கைகளை நிரப்புவதற்காக கட்டணம் குறைக்கப்படும். உதாரணத்துக்கு அந்த பஸ்சில் முன்பதிவு செய்தவர்கள் ரூ.1,200 கட்டணத்திலும், கடைசி நேர சலுகை பெற்றவர்கள் ரூ.900 அல்லது ரூ.1,000 கட்டணத்தில் பயணிப்பார்கள்.
அதேசமயம் கூட்டம் அதிகமாக இருந்தால் முன்பதிவு செய்தவர்கள் குறைந்த கட்டணத்திலும், டிக்கெட் கிடைக்காமல் கடைசி நேரத்தில் வருபவர்களிடம் ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதும் உண்டு. எனவே ஆம்னி பஸ் கட்டணம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.