சென்னை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். எஸ்.பி.வேலுமணி வீட்டில் காலை முதல் மாலை வரை மொத்தம் 11 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் லாக்கர் சாவி மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடைபெறுவது பற்றிய தகவல் அறிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், தாமோதரன், அமுல் கந்தசாமி ஆகியோர் சென்றனர். மேலும் அங்கு அ.தி.மு.க. தொண்டர்களும், மகளிர் அணியினரும் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.இன்றும் 2 வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்று, எனக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
கழக ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர்எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும் மற்றும் எம்.எல்.ஏக்கள்.முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறி உள்ளார்.