சென்னை,
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப் பட்ட 8-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில்கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 8-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்று (புதன்கிழமை) நிறைவடைய உள்ளது.
ஒவ்வொரு கட்ட ஊரடங்கு நிறைவடைவதற்கு முன்பும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்கள் கொடுக்கும் பரிந்துரைகள், ஆலோசனைகளின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
அந்தவகையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இதற்கான கூட்டம் மாலை 3 மணிக்கு தொடங்கி, 3.50 மணி வரை 50 நிமிடங்கள் நடந்தது.
இதில், தலைமைச்செயலாளர் க.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானியும், சென்னை தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குனருமான டாக்டர் பிரதீப் கவுர், உலக சுகாதார அமைப்பின் முதுநிலை மண்டல குழு தலைவர் டாக்டர் கே.என்.அருண்குமார், காணொலிக்காட்சி மூலமாக ஈரோட்டில் இருந்து இந்திய மருத்துவ கழகத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, வேலூரில் இருந்து கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி இயக்குனர் டாக்டர் ஜெ.வீ.பீட்டர் மற்றும் அரசு மருத்துவக்குழு நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதேபோல் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் சென்னை தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், பொதுப் போக்குவரத்தைப்போல பல்வேறு ரெயில்கள் இயக்குவதற்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. விமானப் போக்குவரத்து ஏற்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தடைகளெல்லாம் படிப்படியாக குறைக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்புநிலை வருவதற்கு அரசால் முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உள்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடக்கும்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் நேற்று நடந்த கூட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு இவ்வாறு நடந்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.