தமிழக செய்திகள்

ரூ.58 கோடியில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம் 27-ந்தேதி திறப்பு - எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்

ரூ.58 கோடியில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடத்தை வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.

அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில் நினைவிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கும் பணி தொடங்கி, தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பணிகள் அனைத்தையும் பொதுப்பணித்துறை மேற்கொண்டது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந்தேதி ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி, வரும் 27-ந்தேதி பீனிக்ஸ் பறவை வடிவிலான ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.

இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை 27-ந்தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திறந்துவைக்க உள்ளார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார்.

இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் ப.தனபால், அமைச்சர்கள், துணை சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு