சென்னை
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வீசத் தொடங்கியுள்ளது. முதல் அலையை விடவும் 2-வது அலை காட்டுத் தீ போல வேகமாக பரவி வருகிறது. ஆனாலும்கூட, சிலர் எந்த கவலையும் இன்றி அரசு உத்தரவுகளை மதிக்காமல், கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை வருகிற 30-ந் தேதி வரையிலும் நீட்டித்ததோடு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு பிறப்பித்தது. அதன்படி, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்து வருவதற்கு இ-பாஸ் கட்டாயம். பஸ் பயணங்களில் நின்றுகொண்டு செல்ல அனுமதி இல்லை. மத வழிபாட்டு தலங்கள் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். திரையரங்குகள், ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் உமிழ்பவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கிடையே தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை எழுச்சியடைந்து வருவதால் பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் இட நெருக்கடி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை அளிக்க தேவையான இடவசதிகளை ஏற்படுத்தும் முனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்களின் வளாகங்களை மீண்டும் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றும் பணிகளும் வேகமாக நடக்கின்றன.அந்த வகையில், சென்னையில் பாதிப்பு மோசமாக உள்ளதால் மாநில கல்லூரி விடுதி, அண்ணா பல்கலைக்கழகம், பாரிமுனையில் உள்ள பாரதி கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவன வளாகங்கள் கொரோனா தொற்று உள்ளவர்கள் சிகிச்சை பெறும் வகையில் வார்டுகளாக மாற்றப்பட உள்ளன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடதினார் இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், உதயகுமார் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் கொரோனா பரவலைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றச் செய்வது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.