தமிழக செய்திகள்

மழையால் சேதமடைந்த பயிர்களை எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டனர்

கடலூர், நாகை, மயிலாடுதறை மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த பயிர்களை திறந்த ஜீப்பில் சென்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினர்.

தினத்தந்தி

கடலூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை கொட்டியது. இதனால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. கால்நடைகளும் செத்தன. மழைக்கு சிலர் பலியாகி உள்ளனர். வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

நிவாரண பொருட்கள்

முதலில் கடலூர் சென்ற அவர்கள் புவனகிரி மற்றும் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தலா 500 குடும்பங்களுக்கு அரிசி, வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். மேலும் அங்குள்ள சித்தேரி, பூவாலை உள்ளிட்ட கிராமங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மழை வெள்ளத்தால் அதிகம் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் நிவாரண உதவிகளை வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசு. இந்த ஆட்சி வந்து 10 மாதமாக இருந்தாலும், 10 நாட்களாக இருந்தாலும் மக்களுக்கான நிவாரண உதவிகளை செய்ய வேண்டியது அரசின் கடமை. அதை அவர்கள் செய்யவில்லை என்றார்.

நாகை, மயிலாடுதுறையில்...

பருவ மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும், மாவட்டத்தில் 41 கால்நடைகள் உயிரிழந்தது குறித்தும், 90-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு மளிகை பொருட்கள், அரிசி, போர்வை, பாய் உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் வழங்கினர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் நாகை மாவட்டத்திற்கு சென்றனர். நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. கனமழையால் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பார்வையிட்டனர். திருப்பூண்டி அருகே உள்ள கருங்கண்ணியில் மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களின் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 மதிப்பிலான அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது