சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜராம், விருகை ரவி, தியாகராயநகர் சத்யா, அசோக் உள்ளிட்ட 43 பேரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 27 பேரும் என மொத்தம் 70 பேர் முன்ஜாமீன் கோரி தனித்தனியாக சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
தள்ளுபடி
இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர குற்றவியல் அரசு வக்கீல் ஜி.தேவராஜன் ஆஜராகி, 'இந்த கலவரத்தின் போது 19 லட்சத்து 35 ஆயிரத்து 834 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கலவரத்தால் பொது அமைதிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருந்த பள்ளிகள், கடைகள் மூடப்பட்டன. பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது' என வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி, 'விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மனுதாரர்கள் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மனுதாரர்கள் சாட்சிகளை கலைக்கவும், தலைமறைவாகவும் வாய்ப்பு உள்ளது. குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு முன்ஜாமீன் கோரிய அனைத்து மனுக்களும்தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று உத்தரவிட்டார்.