தமிழக செய்திகள்

மின்சார சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

விவசாயிகளை பகடைக்காய் ஆக்கவேண்டாம் என்றும், மின்சார சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

மின்சார சட்ட திருத்தத்தை திரும்பப்பெறவேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகமே பசுமை விவசாயத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழக விவசாயிகளை 8 வழிச்சாலை, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன், கொள்முதல் விலை, கடன் பிரச்சினை, மின்சார சட்ட திருத்த மசோதா 2020 என போராடிக்கொண்டே இருக்கும் நிலையில் வைத்திருப்பது யார் தவறு? விவசாயிகளுக்கு எதிராக புது சட்ட திருத்தங்கள் வருகிறது என கவலையும், பயமும் அவர்களிடம் அதிகம் இருக்கிறது.

வெற்று நிலத்தை விளை நிலமாக்கி, உணவும், உடையும், பொருளாதாரத்தின் அடித்தளத்தையும் கட்டமைக்கும் விவசாயிகள்தான் நம் பலம், நலம், எதிர்காலம் எல்லாம். அதை நாம் பல முறை உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். மின்சார சட்ட திருத்த மசோதா, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை குறிவைக்கிறது. பல்லாண்டு போராட்டங்களுக்கு பின் விளைவிப்பவர்களுக்கு கிடைத்திருக்கும் உதவி இலவச மின்சாரம். கடந்த 4 வருடங்களாக புதிய இணைப்புகளை வழங்காமல், தட்கல் முறையில் மட்டுமே ரூ.4 லட்சம் கட்டி, புதிய இணைப்பு எடுக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மூலப்பொருட்கள் விலை உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, நிலையில்லா கொள்முதல் விலை என ஏற்கனவே பல முனைகளில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் மேல் இந்த சுமையையும் ஏற்ற துடிக்கிறது அரசு. லாபகரமாக அரசை நிர்வகிக்க முடியவில்லை என்றால் அதை சரிசெய்ய வழிகளை கண்டறியவேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் சிறு உதவியை உங்களின் நிர்வாகத்திறமை இன்மையால் நிறுத்தி விடாதீர்கள்.

விவசாயிகளை வஞ்சித்த தேசங்களின் நிலை என்ன என்பதை சரித்திரம் படித்திருந்தால் புரிந்திருக்கும். விளைவிப்பவர்களின் வாழ்க்கை போராட்டத்தை அதிகப்படுத்தாமல், அவர்களை சிரமத்தில் ஆழ்த்தும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெறவேண்டும். பெயரளவில் பாதிப்புகள் வராது என அறிவிக்காமல் அதை அரசு உத்தரவாக செயல்படுத்தவேண்டும். பொருள் ஈட்டும் உங்கள் போட்டியில் விவசாயிகளை பகடைக் காய் ஆக்காதீர்கள். விவசாயிகளுக்காக, அவர்களது உரிமையை பாதுகாக்க, என்னுடைய குரலும் ஓயாது ஒலிக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...