ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆசனூர் மலைப்பாதையில், கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை கார்களைத் துரத்தியதால், வாகன ஓட்டிகள் அலறியடித்தபடி வாகனங்களை யூ-டர்ன் செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக - கர்நாடக எல்லையான ஈரோடு மாவட்டம் ஆசனூர் மற்றும் காரப்பள்ளம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) கர்நாடகாவிலிருந்து தமிழகம் நோக்கி கரும்பு ஏற்றி வந்த லாரி ஒன்றை, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை திடீரென வழிமறித்தது. லாரியில் இருந்த கரும்புகளை யானை பறித்து சாப்பிடத் தொடங்கியது.
யானை சாலையை முழுமையாக மறித்து நின்றதால், அந்த வழியே வந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டன. அப்போது, திடீரென அந்த காட்டு யானை அங்கிருந்த கார்களை நோக்கி ஆக்ரோஷமாக முன்னேறி துரத்தத் தொடங்கியது. இதனால் நிலைதடுமாறிய வாகன ஓட்டிகள், யானையிடம் இருந்து தப்பிக்க தங்களது கார்களை அதிவேகமாக பின்னோக்கி இயக்கியும், அவசர அவசரமாக யூ-டர்ன் செய்தும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். குறிப்பாக சாலையில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர், யானை வருவதைக் கண்டு வேகமாக ஓடினார்.
இந்த பரபரப்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆசனூர் மற்றும் திம்பம் மலைப்பாதை வழியாக இயக்கப்படும் கரும்பு லாரிகளிலிருந்து கரும்புகளைத் தின்பதற்காக யானைகள் குட்டிகளுடன் சாலையில் முகாமிடுவது இப்பகுதியில் தொடர்கதையாகி வருகிறது. வனத்துறையினர் இப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் யானைகளைக் கண்டால் வாகனங்களை விட்டு இறங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.