தமிழக செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றி புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும்

கொள்ளிடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றி புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.

கொள்ளிடம்:

கொள்ளிடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றி புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.

ஒன்றிய குழு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் அவை கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு துணைத்தலைவர் பானு சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெஜினா ராணி, அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் வரவேற்றார். இளநிலை உதவியாளர் சரத்குமார் அறிக்கையை படித்தார்.

சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும்

அங்குதன் (தி.மு.க.):- பழையாரில் இருந்து திருமுல்லைவாசல் வரை கடலோரப் பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இடையூறாக வனத்துறை அலுவலர்கள் இருந்து வருகிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

லட்சுமி பாலமுருகன் (தி.மு.க.):- மகேந்திர பள்ளி ஊராட்சியில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். திருமேனி அழகர் கோவில் செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பக்தர்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள்.சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகளிர் நலத்திட்ட உதவிகள்

செந்தாமரைக்கண்ணன் (தி.மு.க.):- கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றால் துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை இதனால் கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகளை அவர்களிடம் கேட்டு அறிந்து அதற்கான தீர்வு காண முடியாத நிலை ஏற்படுகிறது. இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சிவபாலன் (பா.ம.க.):- கொள்ளிடம் ஒன்றியத்தில் மகளிர் திட்டம் மூலம் என்ன நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. என்ன நடக்கிறது

என்பதே தெரியாத நிலை உருவாகியுள்ளது .பொதுப்பணித்துறை சார்பில் வாய்க்கால் தூர் வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும். வெள்ள மணல் கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மாலினி பூவரசன் (தி.மு.க.):- திருமுல்லைவாசல் ஊராட்சியில் பொது இடத்தில் காய்கறி சந்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய பஸ் நிலையத்தை விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பானு சேகர் (காங்கிரஸ்) கொள்ளிடம் பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்.இதற்கு கொள்ளிடம் பஸ் நிறுத்தம் எதிரில் அரசுக்கு சொந்தமான சேதமடைந்த கட்டிடம் உள்ளது. அதனை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பஸ் நிலையம் மற்றும் நூலக கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும்

ஒன்றிய குழு தலைவர் பேசுகையில், அளக்குடி ஊராட்சி வெள்ளை மணல் கிராமத்திற்கு விரைவில் சாலை அமைக்கப்படும். கொள்ளிடத்தில் பயணிகள் நலன் கருதி ஆக்கிரமிப்புகள் அகற்றி புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைத்து ஊராட்சிகளுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது தண்ணீர் கிடைக்காத பகுதிகளை தெரிவித்தால் உடனடியாக பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்யப்படும். ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள நிறைவேற்ற வேண்டிய பணிகளை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்கலாம் என்று கூறினார்.

கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் பலராமன், தாரா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், முடிவில் ஒன்றிய பொறியாளர் பூர்ண சந்திரன் நன்றி கூறினார்.