சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், மீனவர் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், புதிய தொழிற்சாலைகள் தொடங்குதல், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்டவைகளுக்காக உள்ள கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டது.
இதற்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால், இந்த அறிக்கையை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே மத்திய அரசு வெளியிட்டுள்ளது. எனவே தமிழக மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்விதமாக, இந்த அறிக்கையை தமிழில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும். அதுவரை இந்த அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்க அவகாசம் வேண்டும். மேலும், இந்த அறிக்கைக்கு சில மாநில ஐகோர்ட்டுகள் தடை விதித்துள்ளன. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்று கூறினார்.
இவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்று எழுத்துப்பூர்வமான விளக்கத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.