சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
சட்டமன்ற தேர்தலில் ஆளும்கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் -28, தே.மு.தி.க.-10. விடுதலை சிறுத்தைகள்-8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-5, இந்திய கம்யூனிஸ்டு-5. ம.தி.மு.க.-4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 2. மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-2 மற்றும் பிற கட்சிகள் - 4 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த சூழலில் தற்போது அனைத்து கட்சிகளிலும் கிட்டத்தட்ட அனைத்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே திமுக கூட்டணியில் முதல்முறை இடம்பெற்றுள்ள தே.மு.தி.க. மீது அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தங்கள் கட்சிக்கு ஒரு எம்.பி சீட் தருவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட ஒப்பந்த பத்திரத்தை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வெளியிட்டார். திருவண்ணாமலை கோவிலில் வைத்து எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு வழங்கிய ஒப்பந்தத்தை செய்தியாளர்கள் முன்பு வெளியிட்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், “எதிர்கட்சி தலைவரின் பேச்சு கண்ணியமாக இருக்க வேண்டும். . எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க.வை அரை பர்சென்ட் என்கிறார். உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது. அங்க கருகிற வாசனை தமிழ்நாடு முழுக்க வருகிறது. 2011-ல் இருந்து 2026 வரைக்கு உங்க கூட தானே இருந்தோம். இப்படி பேசுவது ஒரு முதல்-அமைச்சர் வேட்பாளருக்கு இது அழகல்ல. இது கண்டிக்க தக்க விஷயம். தே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவி தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.
அவர் 2024 தேர்தலின் போது கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை இப்போது அண்ணாமலையார் கோவிலிலிருந்து வெளியிடுகிறேன். இதை இதுவரைக்கும் நான் காட்டியதே கிடையாது. நான் எம். பி சீட் கொடுக்கிறேன் என்று எப்போது சொன்னேன் என்கிறார்.
இதோ பாருங்கள், 2024 மக்களவைத் தேர்தலில் 5 நாடாளுமன்ற சீட்டும், ஒரு ராஜ்ய சபாவும் தரப்படும் என்று ஒப்பந்தம் போட்டு நானும், எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டு இருக்கிறோம். 0.5 சதவீத கட்சி என்றால் ஏன் 5 நாடாளுமன்ற சீட்டும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதாக கையெழுத்து போட்டுக் கொடுத்தீர்கள்?..
2024ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி 2025ல் எங்களுக்கு சீட் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தில் அவர் வருடத்தை போட்டு கொடுக்கவில்லை. அப்போது வருடத்தை போட்டுக் கொடுங்கள் என்று கேட்டபோது, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காலத்திலிருந்தே வருடம் போடுவதில்லை. நம்பிக்கை முக்கியம், வார்த்தை முக்கியம் என்றார். அந்த வார்த்தையை நாங்கள் நம்பினோம். எங்களுக்கும் கீழ்தரமாக பேச தெரியும். அனால் கேப்டன் சொல்லி கொடுத்தது போல நாங்கள் மரியாதையாக இருக்கிறோம். மே 4-ம் தேதிக்குப்பின் இபிஎஸ் .. ஐசியுவுக்கு போகாம இருந்தா சரி” என்று கூறினார்.
ஒப்பந்தம் எதுவம் கையெழுத்திடவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை பிரேமலதா விஜயகாந்த் காட்டியது அரசியல் களத்தில் புயலை கிளப்பியிருக்கிறது.