ஈரோடு
ஈரோட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், 151 கோடியே 57 லட்சம் ரூபாயில் புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோடு சென்றார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 9.45 மணிக்கு நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில், பள்ளிக்கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.21.73 கோடி மதிப்பீட்டில், 13 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், ரூ.76.12 கோடி மதிப்பீட்டில் 14 புதிய திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டி, 4, 642 பயனாளிகளுக்கு ரூ.53.71 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆவணப்படத்தை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.குண்டாறு வழித்தடத்திலும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பவானி சாகர் ஆற்றில் சுமார் 7 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
பல்வேறு வகையில் வளர்ந்து வருகிற மாவட்டமாக ஈரோடு திகழ்கிறது மஞ்சள் சந்தைக்கு புகழ்பெற்றது ஈரேடு மாவட்டம். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்படும் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் முதல்வர் கலந்தாய்வு மேற்கொள்கிறார்.