மனைவி கொலை 
தமிழக செய்திகள்

ஈரோடு: குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் கைது

வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த நாகராஜ் தனது மனைவி ராஜேஸ்வரியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள கொங்கம்பாளையம் பகுதியில் குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்ய முயன்ற கணவனைப் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தகராறில் முடிந்த போதை

ஈரோடு மாவட்டம் நசியனூர் கொங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி. நாகராஜுக்கு கடுமையான குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த (சனிக்கிழமை) அன்று இரவு நாகராஜ் மீண்டும் கடுமையான மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

மனைவி அடித்துக் கொலை

அப்போது அவருக்கும், அவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த நாகராஜ் தனது மனைவி ராஜேஸ்வரியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி, வீட்டின் அருகே இருந்த ஆட்டுக் கொட்டகையிலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலையை மறைக்க மாஸ்டர் பிளான்

மனைவி இறந்ததை உணர்ந்த நாகராஜ், போதை தெளிந்ததும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஒரு நாடகத்தைத் திட்டமிட்டார். ராஜேஸ்வரியின் மரணத்தை ஏதோ உடல்நலக்குறைவால் ஏற்பட்ட 'இயற்கை மரணம்' போலக் காட்டி, ஞாயிற்றுக்கிழமை விடியற்காலைக்குள் யாருக்கும் தெரியாமல் உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளார்.

ரகசிய தகவல்

நாகராஜின் இந்த அவசரமான இறுதிச்சடங்கு ஏற்பாடுகளும், ராஜேஸ்வரியின் திடீர் மரணமும் அக்கம் பக்கத்தினருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.

கணவன் கைது

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராஜேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நாகராஜிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் நாகராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT