ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழியில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஊழியரை ஆத்திரம் தீர கள்ளக்காதலி கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ரத்தக்கறையுடன் பெண்...
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் பெரிய பிரச்சினை, உடனே போலீசாரை அனுப்பி வையுங்கள் என ஒரு பெண் நேற்று மாலை 3 மணிக்கு அவசர உதவி தொலைபேசி எண்ணான 100-க்கு தொடர்பு கொண்டு பேசினார்.
உடனே ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு போலீஸ் ஏட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு விரைந்துள்ளார். அங்கு ரத்தக்கறையுடன் ஒரு பெண் சேலை கட்டிய நிலையில் பதற்றத்துடன் காணப்பட்டார். அப்போது, நான் தான் போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தேன் என்று கூறினார். மேலும், போலீசாரிடம், " என்னை நம்ப வைத்து ஏமாற்றிய ஆஸ்பத்திரி ஊழியரை கொன்று அந்த அறையில் போட்டுள்ளேன்" என்று கூறியதும் அந்த போலீஸ்காரர் அதிர்ச்சிக்குள்ளானார்.
ஆஸ்பத்திரியில் ஊழியர் படுகொலை
பின்னர் அவர் போலீஸ் அதிகாரிகளுக்கு நடந்த விவரத்தை கூறி அங்கு வரவழைத்தார். ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா, சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜாண் கென்னடி, பிரான்சிஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
அங்கு வந்து பார்த்தபோது இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள அறையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவருடைய கழுத்து உள்ளிட்ட உடலின் பல பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணிபுரிந்த கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த ரதீஷ்குமார் (வயது 35) என்பதும், ரதீஷ்குமாரை கொடூரமாக கொன்ற பெண் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஷிபா (36) என்பதும் தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
இதனை தொடர்ந்து ஷிபாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. என்னை நம்ப வைத்து என் வாழ்க்கையை சீரழித்ததால் ரதீஷ்குமாரை கொடூரமாக கொன்றதாக ஷிபா போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் போலீசாரிடம் கூறிய தகவல்கள் விவரம் வருமாறு:-
கள்ளக்காதல்
இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உதவியாளரான ரதீஷ்குமாருக்கும், எனக்கும் கடந்த 2013-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. என்னுடைய கணவர் பெயர் மேக்சன். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
2 பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான திட்டத்தில் சேர ரதீஷ்குமார் உதவி புரிந்தார். அப்போது தான் அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
ரதீஷ்குமாரின் வசீகர பேச்சு எனக்கு பிடித்திருந்தது. அவரும் என்னுடன் நெருங்கி பழகினார். நாட்கள் செல்ல, செல்ல இந்த பழக்கம் இருவரிடையே கள்ளத்தொடர்பை ஏற்படுத்தியது.
கள்ளக்காதல் மோகத்தில் ரதீஷ்குமாருடன் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தேன். அவரை முழுமையாக நம்பியதால் என்னையே இழந்தேன். ரதீஷ்குமார் மீதான நெருக்கத்தில் கணவர் மீது வெறுப்பு ஏற்பட்டது.
கணவரை விவாகரத்து செய்தேன்
ஒரு கட்டத்தில் ரதீஷ்குமார், "உன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விடு, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழலாம்" என கூறினார்.
இதனை நம்பிய நான் அவர் கூறியபடி கணவரை விவாகரத்து செய்தேன். ஆனால் ரதீஷ்குமார் கூறியபடி நடக்காமல் என்னை ஏமாற்றி விட்டார்.
ஒரு வருடத்திற்கு முன்பு எனக்கு தெரியாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரிடம் இதுபற்றி கேட்ட போது, குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த பெண்ணை மணமுடித்ததாகவும், உன்னை என்னால் மறக்க முடியாது என்றும் கூறினார்.
மேலும் கூடிய விரைவில் என்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விடுவேன் எனவும் உறுதி அளித்தார். இதனையும் நான் நம்பினேன். ஆனால் அவருடைய நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. என்னை உதாசீனப்படுத்த தொடங்கினார்.
இது எனக்கு ரதீஷ்குமார் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. என்னிடம் நெருங்கி பழகி கணவரிடம் இருந்து பிரித்ததோடு என் வாழ்க்கையையும் சீரழித்து விட்டு சர்வ சாதாரணமாக உதாசீனப்படுத்திய ரதீஷ்குமாரை கொன்று விடலாமா? என்ற எண்ணம் உருவானது.
ஆத்திரம் தீர குத்தினேன்
இந்தநிலையில் ரதீஷ்குமார் செல்போன் மூலம் என்னை தொடர்பு கொண்டு ஆஸ்பத்திரிக்கு வரும்படி அழைத்தார். இதுதான் அவரை கொலை செய்ய சரியான சந்தர்ப்பம் என முடிவெடுத்தேன்.
ஆஸ்பத்திரிக்கு சென்ற போது அங்கு யாரும் இல்லை. ரதீஷ்குமார் மட்டும் அறையில் இருந்தார். அந்த சமயத்தில் நான் கொண்டு வந்த கத்தி மற்றும் குத்தூசி ஆகிய ஆயுதங்களை பயன்படுத்தி சரமாரியாக ரதீஷ்குமாரை குத்தினேன். ஆத்திரம் தீர அவரை துடிக்க துடிக்க தொடர்ந்து குத்தி கொலை செய்தேன்.
இவ்வாறு ஷிபா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கல்லூரி பேராசிரியை
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷிபாவை கைது செய்தனர். ஷிபா எம்.எஸ்.சி. பி.எட். எம்.பி.ல் படித்து முடித்து ஒரு கல்லூரியில் 7 வருடங்களாக பேராசிரியையாக பணியாற்றியவர் என்பதும், தற்போது அவர் வேலையின்றி இருந்ததும் தெரியவந்தது.
கள்ளக்காதல் விவகாரத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.