சென்னை,
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பிரதமர் மோடியின் மதுரை வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
“சர்ச்சையான பிரச்சினைகளை கையில் எடுப்பதும், மதக்கலவரங்களை ஏற்படுத்துவதும், அனைத்து மக்களும் அமைதியாக வாழ்வதை அனுமதிக்க முடியாது என்று கங்கனம் கட்டிக் கொண்டு இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் முகமாக பிரதமர் மோடி இருக்கிறார்.
அவர் எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடமில்லை. பிரதமர் மோடி 100 முறை வந்தாலும் தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் திருப்பரங்குன்றம் மட்டுமின்றி, ஆறு படை வீடுகளுக்கு சென்றாலும் முருகப்பெருமான் மன்னிக்க மாட்டார்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வருவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், தமிழ் மண் என்பது அவர்களது மண் இல்லை, இது அவர்களுக்கு உகந்த நிலமும் இல்லை. தமிழக மக்களால் பலமுறை புறக்கணிக்கப்பட்ட பா.ஜ.க. இப்போது அ.தி.மு.க. முகமூடியை போட்டுக்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அடகு வைத்து விட்டார். ஒருபோதும் தமிழக மக்கள் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் காலூன்ற அனுமதிக்க மாட்டார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.