சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன், பத்மபிரியா உள்ளிட்ட 78 நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். மேலும் திமுகவில் இணைய உள்ள 11,000 பேரின் பெயர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மகேந்திரன் சமர்பித்தார்.
திமுகவில் இணைந்த பின் பேசிய மகேந்திரன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் சாதாரண தொண்டனாக செயல்படுவேன். திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி. திமுகவின் கொள்கைகளே எனது சித்தாந்தமாக இருந்தது என்று அவர் கூறினார்.
இந்நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மகேந்திரன் தாய் கழகமான திமுகவில் இணைந்ததை வரவேற்கிறேன். கொங்கு மண்டலத்தில் திமுக எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததை நினைத்து வருத்தப்படுகிறேன். தேர்தலுக்கு முன்பு மகேந்திரன் போன்றோர் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் உள்ளிட்டவர்கள் திமுகவுக்கு வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.