தமிழக செய்திகள்

'விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனைவருக்கும் அனுமதி' - பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் இன்று மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி

சென்னை,

தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலை காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 72 குண்டுகள் முழங்க முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், இறுதி ஊர்வலத்திற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் எனவும் அங்கு பொதுமக்கள் வழிபட அணையா தீபம் ஏற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் இன்று மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று முதல் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். 

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'விஜயகாந்த் நினைவிடத்தில் சமாதி அமைக்கப்படும் . இன்று முதல் பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடு ஏதும் இல்லாமல்  சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தலாம். கேப்டன் விட்டு சென்ற பணிகள் மற்றும் மிகப்பெரிய கடமைகள் ஏராளமாக உள்ளன அதனை தொடர்ந்து நாம் செயல்படுத்த வேண்டும். பொது இடத்தில் கேப்டனுக்கு சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க முதல்-அமைச்சரிடம் மக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளோம்' என்று தெரிவித்தார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்