தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். இந்தியாவிலேயே முதன் முதலாக அகழாய்வு செய்த இடம் என்ற சிறப்பை கொண்ட ஆதிச்சநல்லூரில் இரும்பு பொருட்கள், சுடுமண் பொருட்கள், மூவாயிரம் ஆண்டு பழமையான நெல்மணிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மத்திய தொல்லியல் துறை சார்பில் அந்த பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு வரை அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்தார்.
இந்நிலையில் திருச்சி மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரும், அகழாய்வு இயக்குனருமான அருண்ராஜ் தலைமையில் மீண்டும் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னை, லண்டன், பெர்லின் போன்ற நகரங்களில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருட்களை மீண்டும் ஆதிச்சநல்லூருக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.