தமிழக செய்திகள்

தமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா?

தமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா? என அரியலூர் மாவட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் 2023-24-ம் ஆண்டுக்கான பொது 'பட்ஜெட்'டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் அரியலூர் மாவட்ட மக்கள் பலர் தாங்கள் விரும்பும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்குமா? என்று ஆவலோடு காத்து இருக்கிறார்கள். அதுபற்றிய கருத்துகள் வருமாறு:-

வேலைவாய்ப்பு கேள்விக்குறி

அரியலூரை சேர்ந்த அன்பானந்தம்:- அரியலூரை சுற்றி அரசு மற்றும் தனியார் சிமெண்டு ஆலைகள் 7 இருந்த போதிலும் வேலை வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்பேட்டைகளை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் சிமெண்டு ஆலைகள் ஆக்கிரமித்துள்ள பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும். அரியலூரில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான நிதி செலுத்தப்பட்ட நிலையில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். அரியலூர் நகரில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. அரசு கூடுதல் நிதி ஒதுக்கி பல அடுக்கு உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடம் மற்றும் பயணிகள் தங்குவதற்கான அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கூடிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

அரியலூர் அரசு மருத்துவமனை அருகே கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை இணைப்பு சாலை வசதிகள் உருவாக்கப்படவில்லை. கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம், அரியலூர் மார்க்கமாக சேலத்திற்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரியலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மாநில அரசு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை அறிவிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தை தரம் உயர்த்த வேண்டும்.

அனைத்து சாலைகளையும் தரம் உயர்த்த வேண்டும்

சின்னவளையம் சமூக ஆர்வலர் ஆறுமுகம்:- ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் உள்ள ஆவேரி மற்றும் சின்னவளையத்தில் உள்ள அலங்கன்ஏரி ஆகிய ஏரிககளை சுற்றி 15 அடி அகலமான நடைபாதை அமைத்து பொதுமக்கள் காலை, மாலை நடைபயிற்சி செய்வதற்கு ஆவண செய்தல் வேண்டும். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தற்போது மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அண்மையில் அரசு ஆணை பிறப்பித்துள்ளதால் அந்த சாலை மிகவும் பரபரப்பாகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆதலால் அந்த சாலையை நான்கு வழி சாலையாக மாற்றம் செய்திட வேண்டும்.

நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவும், கடைவீதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான கட்டண கழிப்பறை கட்டிகொடுக்கவும், நகரின் உள்புரத்தில் உள்ள அனைத்து சாலைகளும் சீரழிந்து விட்டதால் உடனடியாக அனைத்து சாலைகளையும் தரமுள்ள சாலைகளாக அமைக்கவும் நிதி ஒதுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகத்தில் உள்ள அனைத்து பூங்காகளிலும் தற்போது சமூக விரோத செயல் நடைபெற்று வருவதால் பூங்காக்கள் அனைத்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஜெயங்கொண்டம் நகரில் நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நகராட்சி மூலம் சொத்து வரியுடன் நூல் நிலைய வரி லட்சக்கணக்கில் பொது மக்களிடமிருந்து வசூலித்து நூலகதுறைக்கு கட்டப்பட்டு வரும் நிலையில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி நவீன தொழில் நுட்பம் நிறைந்த நூலகம் கட்டி கொடுக்கவும் நிதி ஒதுக்க வேண்டும்.

கடலில் கலக்கும் நீரை...

தூத்தூர் தங்க தர்மராஜன்:- கடந்த 2004-ம் ஆண்டு முதல் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை மற்றும் தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் வடகரையில் அமைந்துள்ள அனைத்து கிராமத்தில் உள்ள பொதுமக்கள் விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தியதில் பலனாக கடந்த கால ஆட்சியில் 16-07-2019 அன்று சட்டமன்றத்தில் அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்திற்கும் இடையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை திட்டத்தை செயல்படுத்த ஆய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.23 லட்சம் ஒதுக்கீடு செய்து அதன் பின்னர் மாநில அளவில் நீர்வள ஆதார வல்லுனர்கள் நேரில் பார்வையிட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்த போது முதல் அலை கொரோனா தொற்று காரணமாக அரசு அலுவலகங்கள் மாதக்கணக்கில் விடுமுறை விட்ட காரணத்தால் திட்டம் செயல்படுத்த காலதாமதம் ஏற்பட்டது. பிறகு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் பரப்புரைகளில் தற்போதைய முதல்-அமைச்சர் ஜெயங்கொண்டம் கூட்டத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை உறுதியாக செயல் படுத்துவோம் என உத்திரவாதம் அளித்தார். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் மழைகாலங்களில் கடலில் கலக்கும் நீரை வீணாகாமல் தேக்கி வைக்கும் திட்டத்தை நிதி ஒதுக்கீடு செய்து மீண்டும் புத்துயிர் கொடுத்து செயல்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் 1,753 எக்டேர் நிலப்பரப்பில் முரளி சாகுபடி செய்யப்படுகிறது. முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் ஏற்றுமதி முனையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. அதற்கான பணிகள் தொடங்கி விவசாயிகளை காக்க வேண்டும். மாவட்டத்தில் 30,562 எக்டேர் பரப்பளவில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. முந்திரி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் முந்திரி சார்ந்த தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். சோழர் பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும்.

திருமானூர் சமூக ஆர்வலர் பாஸ்கர்:- காமராஜர் காலத்தில் தூர்வாரப்பட்ட இந்த கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரியை மீண்டும் தூர் வாரி புதுப்பிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவதற்கும், கழிவறை வசதிகளும் செய்து தர வேண்டும். திருமானூர் ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணை கட்டி தர வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான இந்த திருமானூர் ஒன்றியத்தில் ஆண்டுதோறும் செயல்படும் வகையில் நான்கு இடங்களில் நிரந்தர அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும்.

அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி...

தா.பழூரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரி முருகன்:- அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் தீயணைப்பு நிலையத்தை அமைக்க வேண்டும். இதனால் ஜெயங்கொண்டம் அல்லது அரியலூர் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும். தா.பழூர் பகுதியில் இருந்து கும்பகோணம், அரியலூர் பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் படிப்பதற்கு சென்று வருகின்றனர். இதனால் பஸ் போக்குவரத்தில் மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் எந்த பெரிய அளவிலான கல்வி சாலைகளும் இல்லாத தா.பழூர் பகுதியில் ஒரு அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும். விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளை மேற்கொள்ளும் வகையில் தா.பழூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி கூடுதலாக மருத்துவர்களை பணி அமர்த்துவதோடு ஏற்கனவே காலி பணியிடங்களாக இருக்கக்கூடிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தா.பழூர் நகரத்தையொட்டி ஜெயங்கொண்டத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் புறநகர் பஸ்கள் செல்வதற்கு கும்பகோணம் சாலையை இணைக்கும் வகையில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும். இப்பகுதியில் அதிக அளவு நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே எந்த தொழில் வாய்ப்புகளும் இல்லாத பகுதியாக இருப்பதால் நவீன அரிசி ஆலை ஒன்று அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல், முந்திரி, பல்வேறு விதமான தானியங்கள், எண்ணெய்வித்து பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தி செய்யப்படும் பகுதியாக இருப்பதால் இப்பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால் பல்வேறு கிராம பகுதிகளை பிரதான சாலைகளோடு இணைக்கும் அனைத்து சாலைகளையும் தரமான சாலைகளாக தரம் உயர்த்த வேண்டும். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தமிழக பட்ஜெட் தாக்கல் இருந்தால் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.