சென்னை,
சுகாதாரத்துறை சார்ந்த படிப்புகளின் தரத்தை உயர்த்த பாடப்பிரிவுகள் சீரமைக்கப்பட்டு, படிப்பு காலஅளவுகள் மாற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பான அரசிதழை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆப்டோமெட்ரி (பி.ஆப்டோம்) ஆக்குபேஷனல் தெரபி (பி.ஓடி) மற்றும் பிசியோதெரபி (பி.பிடி) ஆகிய இளங்கலை படிப்புகளின் கால அளவு 4 மற்றும் 4.5 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 2026-27 கல்வி ஆண்டு முதல், முதுகலை படிப்புகளான பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி ஆகியவை பொதுவான பட்டமாக வழங்கப்படாமல், குறிப்பிட்ட துறை சார்ந்த சிறப்புப் பிரிவுகளுடன் மட்டுமே வழங்கப்படும்.
2026-27 கல்வி ஆண்டிற்கு முன் சேர்ந்த மாணவர்களுக்கு முந்தைய விதிமுறைகளின்படியே பட்டங்கள் வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், மருத்துவ பரிசோதனை, அவசர சிகிச்சை, மயக்கவியல், ஊட்டச்சத்து. ரேடியோலஜி போன்ற பல துறைகளில் புதிய இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.