தமிழக செய்திகள்

போலி பாஸ்போர்ட் வழக்கு: சினிமா கலைஞர் மீதான வழக்கை ரத்துசெய்ய முடியாது ஐகோர்ட்டு உத்தரவு

போலி பாஸ்போர்ட் வழக்கில், சினிமா ஒப்பனை கலைஞர் மீதான வழக்கை ரத்துசெய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சிவகுமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், சினிமாவில் ஒப்பனை கலைஞராக உள்ளேன். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி மான்வேட்டை என்ற படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல, சென்னை விமான நிலையத்துக்கு சென்றோம். அப்போது, எங்கள் படக்குழுவில் 3 இலங்கை தமிழர்கள், போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல இருப்பதை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் என்னையும் ஒரு குற்றவாளியாக சேர்த்து விட்டனர். எனவே, எனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

முக்கிய பங்கு

இந்த வழக்கு நீதிபதி பி.என். பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் கிருத்திகா, இந்த வழக்கில் மனுதாரருக்கு முக்கிய பங்கு உள்ளது. அதனால், வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் தாமரைச்செல்வன், மனுதாரர் ஒப்பனை கலைஞர். அவருக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், வெளிநாடுகளில் நடைபெறும் வேறு திரைப்படங்களின் படப் பிடிப்புக்காக அவரால் செல்ல முடியவில்லை என்று வாதிட்டார்.

6 மாதம்

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனுதாரர் மீதான வழக்கை ரத்துசெய்ய முடியாது. அதேநேரம், இந்த வழக்கினால், அவர் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை என்று வாதிடப்பட்டது. அதனால், அவர் மீதான இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து, குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு