தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டராகப் பணியாற்றி வரும் விஷு மகாஜனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் அரசு அதிகாரிகளிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் சில அரசு அதிகாரிகளுக்கு கலெக்டரின் புகைப்படம் வைக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணிலிருந்து பணம் கேட்டுத் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோதே, கூட்டத்தில் பங்கேற்ற சில அதிகாரிகளின் எண்களுக்கு அதே வாட்ஸ்அப் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி (Message) வந்துள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனே இத்தகவலை கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மர்ம நபர் போலியாக கலெக்டரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி அதிகாரிகளிடம் பணமோசடி செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அனைத்து அதிகாரிகளுக்கும் எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்பட்டதுடன், மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த வாட்ஸ்அப் எண் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த மர்ம நபரைப் பிடிக்கப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.