சென்னை,
சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவரான பொன். மாணிக்கவேல், புதனன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் சிலை கடத்தல் வழக்கில் இரண்டு தமிழக அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து உரிய ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பொன். மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆம்பூரில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சிலைக் கடத்தலில் எங்களுக்கு தொடர்பு இல்லை. பொன். மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில், எங்கள் பெயரை குறிப்பிட்டு பொய்யான செய்தி பரப்பப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எங்கள் மீது திட்டமிட்டு பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பொய்யான செய்தியால் எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.