தமிழக செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவு முறை கொண்டு வரப்படும் ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்

நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்காக குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவான ‘பயோமெட்ரிக் முறை’ கொண்டு வருவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அபிராமபுரத்தில் உள்ள நியாய விலைக்கடையில் வேலை செய்த கீதா என்பவர், குற்றச்சாட்டுகளில் சிக்கியதால் கடந்த 2010-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நியாய விலைக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கீழ் 32 ஆயிரத்து 909 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கேமரா பொருத்த அதிக நிதி தேவைப்படும். எனவே, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் ஆலோசனை நடத்திய பின்னர், அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று கூறினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 1,455 நியாயவிலைக் கடைகள் நடத்தப்பட்டுவருகின்றன. இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்ததும், ரூ.20 கோடியே 79 லட்சத்து 92 ஆயிரத்து 250 செலவில் கேமராக்கள் பொருத்தப்படும்.

இதுதவிர கூட்டுறவு சங்கங்கள், பெண்கள் சுய உதவிக்குழுக்கள், மீனவர் சங்கங்கள், நடமாடும் நியாயவிலைக்கடை என்று மொத்தம் தமிழகத்தில் 35 ஆயிரத்து 232 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு ரூ.97 கோடி செலவாகும் என்று கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளருக்கு கடந்த ஜனவரி 8-ந்தேதி எழுதியுள்ள கடிதத்தில், நியாயவிலை கடைகளில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க அனைத்து பயனாளிகளுக்கும், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. தாங்கள் வாங்கும் பொருட்கள் தொடர்பான தகவல்களை அவர்களது செல்போனில் தெரிந்துக்கொள்ளும் வகையில் இணைப்புகள் தரப்பட்டுள்ளன.

1,500 குடும்ப அட்டைகள் மேல் உள்ள 416 கடைகளில் ரூ.5 கோடியே 94 லட்சம் செலவில் 2 கட்டங்களாக கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சரக்கு கிடங்குகளில் இருந்து லாரிகளில் பொருட்களை ஏற்றுவதை கண்காணிக்கவும், அனைத்து கிடங்குகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்காக குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவான பயோமெட்ரிக் முறை கொண்டு வருவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் உள்ள ஏதாவது ஒரு நபர் கைரேகையைப் பதிவு செய்தால் போதுமானது. இதன் மூலம் முறைகேடுகள் முற்றிலும் களையப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை சிறப்பு அரசு பிளடர் எல்.பி.சண்முகசுந்தரம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த கடிதத்தை பதிவு செய்து கொள்கிறேன். அதேநேரம், இந்த கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருகிற மார்ச் 11-ந்தேதி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு