திருப்பூர்,
திருப்பூர் டி.கே.டி. மில் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (43 வயது). விவசாயி. இவரது மனைவி சத்யா (41 வயது). இந்த தம்பதிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் தனது 15 வயது மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு செந்தில்குமார், வீட்டுக்கு வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை தனது குடும்ப வாட்ஸ்-அப் குழுவில் செந்தில்குமார் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை கொலை செய்துவிட்டதாகவும், தானும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் பதிவிட்டிருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு சத்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். செந்தில்குமார் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்றுவிட்டு செந்தில்குமார் தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே செந்தில்குமார் தனது கைப்பட எழுதியதாக ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதம், 15 பக்கங்களை கொண்டதாக இருந்தது. அதில், மனைவி வழி சொத்துகளை பாகப்பிரிவினை செய்தபோது, மனைவிக்கு உரிய அளவு, பங்கு கிடைக்கவில்லை என்றும், உரிய பங்கை பெற்றுவர மனைவியிடம் கூறியபோது, அவர்களுக்குள் மன வருத்தம் ஏற்பட்டது உள்பட பல்வேறு தகவல்களை செந்தில்குமார் எழுதியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தனது மகள் சிவநேத்ராவை உறவினர் வீட்டுக்கு அனுப்பிய பிறகு அன்று இரவு செந்தில்குமாருக்கும், சத்யாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொன்றார்.
பின்னர், அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டும், வாட்ஸ்-அப் குரூப்பில் தகவல் தெரிவித்துவிட்டும் தென்னை மரங்களுக்கு பயன்படுத்தக்கூடிய விஷ மாத்திரைகளை தின்றுவிட்டு, தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.