தமிழக செய்திகள்

குடும்ப பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து நகைகள் பறிப்பு: ஆபாச படம் எடுத்து மிரட்டிய தாய், மகன் கைது

தொழில் அதிபரின் மனைவியிடம் 1 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளையும், 2.5 கிலோ வெள்ளி பொருட்களையும் பறித்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், 2 மகன்களும் குடும்ப பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து நகைகளை பறித்ததுடன், ஆபாச படம் எடுத்து மிரட்டி உள்ளனர். இவர்கள், தாங்கள் குடியிருக்கும் பகுதியில் வசிக்கும் அழகான பணக்கார குடும்ப பெண்களை தேர்வு செய்து, அவர்களிடம் வலியபோய் அன்பாக பழகுவார்கள்.

முதலில் தாய், பாச வலையை விரிப்பார். அந்த வலையில் குடும்ப பெண்கள் சிக்கியவுடன் மகன் மூலம் காதல் வலையை வீசுவார். காதல் வலையில் சிக்கும் பெண்களிடம் ஏதாவது கதைகளை சொல்லி நகை-பணத்தை பறிப்பார்கள். பின்னர் குடும்பத்தோடு அந்த பகுதியை காலி செய்துவிட்டு தப்பி ஓடிவிடுவார்கள்.

அதன்படி இவர்கள், சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தனர். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் மனைவிக்கு தூண்டில் போட்டார்கள். முதலில் தாய் பாசத்தை காட்டினார். பாசத்தில் விழுந்ததும், மூத்த மகன், காதல் வலையை வீசி சிக்கவைத்து பின்னர் தனது காமத்துக்கும் அடிபணிய வைத்தார்.

வழக்கம்போல் அந்த பெண்ணிடம் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை வழக்கில் சிக்கியுள்ளதால் தங்களது கோடிக்கணக்கான பணம் முடக்கப்பட்டுள்ளதாக நாடகமாடி 1 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளையும், 2½ கிலோ வெள்ளி பொருட்களையும் பறித்தார்கள். ரூ.20 ஆயிரம் பணத்தையும் பிடுங்கினார்கள்.

ஒரு கட்டத்தில் தன்னால் பணமோ, நகையோ இனிமேல் கொடுக்க இயலாது என்று தொழில் அதிபரின் மனைவி மறுத்துவிட்டார். இந்த விஷயம் எனது கணவருக்கு தெரிந்துவிட்டது என்றும் கூறினார். இதனால் மோசடி கும்பலை சேர்ந்த தாயும், மகன்களும் பெரிய அளவில் அச்சுறுத்தினார்கள்.

தனது மகனோடு உல்லாசமாக இருக்கும் ஆபாச படங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவோம் என்றும் தாயார் மிரட்டினார். இதனால் பயந்துபோன தொழில் அதிபரின் மனைவி, தனது கணவரிடம் உண்மையை சொல்லி கதறி அழுதார். உடனடியாக இதுகுறித்து வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக வேப்பேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

Also read:இதுவரை தமிழகம் காணாத மோசமான ஆட்சியை திமுக காட்டியிருக்கிறது: அண்ணாமலை

இந்த நகை மோசடி கும்பலை சேர்ந்த தாயாரின் பெயர் சங்கீதா (54 வயது). அவரது மூத்த மகனின் பெயர் திலீப் (33 வயது), 2-வது மகன் பெயர் அங்கித் (31 வயது ). போலீசார் சங்கீதாவையும், அங்கித்தையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திலீப், மத்திய பிரதேசம் மாநிலத்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவரிடம் தான் தொழில் அதிபரின் மனைவியிடம் பறித்த தங்க நகைகளும், வைர நகைகளும், வெள்ளி பொருட்களும் உள்ளன. இவர்தான் தொழில் அதிபரின் மனைவியை தனது காதல் வலையில் விழ வைத்தவர். திலீப்பை கைது செய்து அவர் அபகரித்த தங்கம், வைர நகைகளை மீட்க வேப்பேரி போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.