தஞ்சை,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் அமிர்தா (வயது 30). எம்.எஸ்சி. பட்டதாரி. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூரை சேர்ந்த தனக்கோடி- விஜயா தம்பதியின் மகன் சஞ்சய்குமார் (32). பி.பி.ஏ. பட்டதாரி. இவர்கள் 2 பேரும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அமிர்தா, சஞ்சய்குமாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் சஞ்சய்குமார் வீட்டில் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
திடீர் திருப்பமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சஞ்சய்குமார் குடும்பத்தை சேர்ந்த சிலரும், அமிர்தாவின் குடும்பத்தாரும் கலந்து பேசி 27.8.2025 அன்று (நேற்று) நாகை மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து சஞ்சய்குமார்- அமிர்தா திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.இதற்காக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன. காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.
சஞ்சய்குமார் மற்றும் குடும்பத்தினர் திருமணத்துக்காக நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணமகளின் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தனர். ஆனால் அவர்கள் நேற்று முன்தினம் இரவு வரை வரவில்லை. திருமண நாள் வந்து விட்ட நிலையில் மணமகன் குடும்பத்தார் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்த அமிர்தா, சஞ்சய்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது.
இதனால் பதற்றம் அடைந்த அவர் மணமகனின் சகோதரிகளிடம் பேசியபோது, உறவினர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சஞ்சய்குமாரை எங்கேயோ அழைத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர். சஞ்சய்குமார் திடீரென மாயமானது அமிர்தா மற்றும் குடும்பத்தினரை மிகுந்த பதற்றத்துக்குள்ளாக்கியது.
இதுதொடர்பாக அமிர்தாவின் சகோதரர்கள் கண்ணன், கார்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட்டிடம் புகார் தெரிவித்தனர். அவர், உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்துக்கு சென்று விசாரித்தபோது சஞ்சய்குமாரை உறவினர்கள் அழைத்துச்சென்றது தெரியவந்தது. நேற்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் சஞ்சய்குமார் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அங்கிருந்து அவரை போலீசார் அழைத்து வந்து அவருடைய காதலி அமிர்தா வீட்டில் ஒப்படைத்தனர். இதையடுத்து திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் சஞ்சய்குமாருக்கும், அமிர்தாவுக்கும் முறைப்படி திருமணம் நடந்தது.